ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக்கோரி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி - வெளிநடப்பு
சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் கொண்டு வருகிறது.
இதனிடையே, சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் தனி தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருந்தது. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றும்படி சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிதீர்மானத்தை இன்று நிறைவேற்றிவிட்டு நாளை தனித்தீர்மானம் குறித்து விவாதிப்போம் என்று சபாநாயகர் கூறினார்.
இதனால், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.