பனமரத்துப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
கோம்பைக்காடு குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பனமரத்துப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
பனமரத்துப்பட்டி:
மன்ற கூட்டம்
பனமரத்துப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபு கண்ணன், செயல் அலுவலர் (பொறுப்பு) சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தமுள்ள 15 கவுன்சிலர்களில், 11 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. கவுன்சிலர்களான சின்னதம்பி என்கிற காளியண்ணன், தேவகிபாலசந்திரன், ஜெயலட்சுமி, செல்வமணி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-
பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பல்லவநாயக்கன்பட்டி செல்லும் வழியில் பனமரத்துப்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் பேரூராட்சி நிர்வாகம் கேட்டுகொண்டதால் வருவாய்த்துறை இடம் ஒதுக்கியது. இப்போது அந்த இடத்தை விட்டு விட்டு பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு கோம்பைக்காடு பகுதியில் திடக்கழிவுமேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பேரூராட்சி மன்றத்தில் இன்று (நேற்று) நடைபெறும் மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புறக்கணிப்பு
13-வது வார்டு கோம்பைக்காடு குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே கல்குவாரி மற்றும் கிரஷர்களால் பயங்கர மாசு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் அதே பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி அங்கு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் அந்த பகுதி மக்களும், அங்குள்ள விவசாய நிலங்களும் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து தலைவர், துணைத்தலைவர் உள்பட 11 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.