கந்து வட்டி வசூலித்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டத்தில் கந்து வட்டியை ஒழிக்க 7 டி.எஸ்.பி. தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலித்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பிரமுகரின் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

Update: 2022-06-10 19:03 GMT

 கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், கந்து வட்டி கொடுமையால் கடலூர் வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். கந்து வட்டி கொடுமையால் போலீஸ்காரர் ஒருவர் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்து வட்டியை ஒழிக்க சிறப்பு குழுக்களை அமைத்து, கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கந்து வட்டியை ஒழிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார்.

அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

இதையடுத்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சமட்டிக்குப்பத்தை சேர்ந்தவரும், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை கடலூர் தெற்கு மாவட்ட தலைவருமான சுப்பிரமணியன், இவரது அலுவலகத்தில் பணிபுரிபவரான வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் மீது வடலூர் போலீசார் கந்து வட்டி வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அ.தி.மு.க. பிரமுகரின் கடலூர் வண்டிப்பாளையம், குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் உள்ள அவரது அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர். இதில் யார்-யாருக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேரிடம் கந்து வட்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7 குழுக்கள் அமைப்பு

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறுகையில், மாவட்டத்தில் கந்து வட்டியை ஒழிக்க 7 உட்கோட்டங்களிலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை கொண்ட 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஏற்கனவே கந்து வட்டி தொடர்பாக போடப்பட்ட வழக்குகளையும், புதிதாக வரும் புகார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பார்கள். தகவல் கிடைத்தாலும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

5 பேரிடம் விசாரணை

இதன்படி மாவட்டம் முழுவதும் வரப்பெற்ற புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வடலூர், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் வரப்பெற்ற புகார்கள் மீது இதுவரை அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபடுவார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்