அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இணைந்தால்தான் வெற்றிபெற முடியும் - டி.டி.வி. தினகரன் பேட்டி

அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இணைந்தால்தான் வெற்றிபெற முடியும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-;

Update: 2022-11-19 23:47 GMT

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வெற்றிச்சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்தை வைத்துக்கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி வந்தார்.

அ.தி.மு.க. என்ற கட்சியும், இரட்டை இலை என்ற சின்னமும் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு துணிச்சல் இருந்தால் 2019-ல் பரிசு பெட்டி சின்னத்திலும், ஆர்.கே. நகரில் குக்கர் சின்னத்திலும் நான் போட்டியிட்டதுபோல் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து, புதிய சின்னத்தில் போட்டியிட தயாரா?.

தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட நிறைய செலவு செய்தும், எடப்பாடி நகராட்சியில் சேர்மன் பதவியை அவரால் பிடிக்க முடியவில்லை. எனவே அவரின் நிலைமை என்ன என்பதை உணர வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற கட்சி செயல்படாத ஒன்றாகத்தான் உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1989-ம் ஆண்டு தனியாக ஒரு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுபோல, எடப்பாடி பழனிசாமி தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து வெற்றி பெற முடியும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

ஜெயலலிதாவும், ஜானகி அம்மாளும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாமல் போனதால் ஜானகி அம்மாள் விட்டுக்கொடுத்தார். அதன் பிறகுதான் அ.தி.மு.க. வெற்றியை கண்டது. அதேபோல தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒரே அணியில் திரண்டால்தான் முடியும்.

இதற்காக ஒரே கட்சியில் என்பது இல்லை. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் தி.மு.க.வை வெல்ல முடியும். இந்த 1½ ஆண்டுகளில் தி.மு.க. மீது நிறைய அதிருப்தி உள்ளது. மேலும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால், நமக்கான பிரதமரை தேர்வு செய்ய ஒன்றிணைந்து கூட்டணி கட்சியுடன் செயல்பட வேண்டும். அதைமீறி கூட்டணி அமையவில்லை என்றால் அ.ம.மு.க. தனித்து போட்டியிடக்கூடிய தைரியமான கட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்