அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-03-11 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக திகழ்கிறது. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் பணத்தை மட்டும் நம்பி ஈரோட்டில் வெற்றி பெற்று உள்ளது. இது பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் இன்னும் தி.மு.க. அரசு மீது கோபத்தில் தான் உள்ளனர். எனவே நாம் தி.மு.க அரசின் திறனற்ற ஆட்சியை மக்களிடம் எடுத்து தெரிவித்தாலே போதும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற ஒரே நோக்கத்துடன் நாம் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுதாகர், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்