அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது என்று திருவண்ணாமலையில் எச்.ராஜா என்று கூறினார்.

Update: 2022-07-04 12:33 GMT

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது என்று திருவண்ணாமலையில் எச்.ராஜா என்று கூறினார்.

கருணாநிதி சிலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதை வேங்கிக்கால் பகுதி பிரியும் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலையை வருகிற 8-ந் தேதி மாலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் இன்று காலை இதனை பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் கருணாநிதி சிலை வைப்பது இந்துக்களை அவமானப்படுத்துகிற செயல். எனவே, எல்லா ஆன்மிக சக்திகளையும் இணைத்து இதற்கு எதிராக பலவித போராட்டங்கள் நடத்தப்படும்.

சிலை வைக்கப்பட்டு உள்ள இடம் 92 அடி நத்தம் பட்டா ஆகும். ஆனால் ஆரம்பத்தில் 250 அடிக்கு பட்டா இருப்பதாக கொடுத்தனர். பிறகு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மீண்டும் 92 அடியாக மாற்றப்பட்டு உள்ளது.

250 அடியாக மாற்றிய அந்த அதிகாரி ஏன் கைது செய்யப்படவில்லை?. அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

அண்ணாமலையார் நுழைவு வாயில்

அண்ணாமலையாருக்கு சொந்தமான ஊரில் அண்ணாவின் பெயரில் ஏன் நுழைவு வாயில். எனவே இதை அண்ணாமலையார் நுழைவு வாயில் என்று உடனடியாக மாற்ற வேண்டும்.

கிரிவலப்பாதை முழுவதும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள், கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. வருகிற பவுர்ணமி கிரிவலம் நடப்பதற்குள் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கோவில் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.

எங்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு அமோகமாக வெற்றி பெறுவார். அவருக்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பா.ஜ.க. தலையிடாது

அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது. ஒற்றை தலைமையா?, இரட்டை தலைமையா? என்பதை அ.தி.மு.க.வினர் தான் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்