அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல்வியூகங்களை முறியடிக்கும் வகையிலும் தேர்தல் பிரசாரம் இருக்கும்;ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு
அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை முறியடிக்கும் வகையிலும் தேர்தல் பிரசாரம் இருக்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை முறியடிக்கும் வகையிலும் தேர்தல் பிரசாரம் இருக்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அத்தியாவசிய பணிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற தி.மு.க. கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பணிமனை ஈரோடு திருநகர்காலனியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ம.ம.க. பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாநில செயலாளர் எம்.எஸ்.ஹமீது, ம.ம.க. தலைமை பிரதிநிதி கோவை அக்பர், மாவட்ட தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பணிமனையை திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-
இடைத்தேர்தலையொட்டி தினமும் மாலையில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க. அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தான், அடுத்த தேர்தலை சந்திப்போம் என்று உறுதி அளித்து உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய பணிகள் செய்யப்படுகிறது.
தேர்தல் வியூகம்
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவையொட்டி, அவரது நினைவாக முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயர் தேர்தல் முடிந்த பின் வைக்கப்படும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை முறியடிக்கும் வகையிலும் தேர்தல் பிரசார பணிகள் இருக்க வேண்டும். இது மறைந்த திருமகன் ஈவெராவுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். எனவே அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த இடைத்தேர்தல் வந்தது யாருக்கும் மகிழ்ச்சி கிடையாது. இருந்தாலும், முதல்-அமைச்சரை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பு. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாநகராட்சியின் 33 வார்டுகள் உள்ளது. இதனை 8 பகுதிகளாக பிரித்து, 12 அமைச்சர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்க நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
விழாவில் தி.மு.க., காங்கிரஸ் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.