அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் தான் தமிழக மக்களுக்கு விடிவு பிறக்கும் என்று தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாமலும், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமலும் இருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வீரபாண்டி பிரிவில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கி பேசியதாவது:-
தி.மு.க. அரசு திறமையற்று செயல்படுகிறது. பல்லடத்தில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி உள்ளது. அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் என்று சொன்ன பிறகுதான் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அவினாசி-அத்திக்கடவு திட்டம், குடியிருப்பு திட்டம், குடிநீர் திட்டம், பல்லடம் புறவழிச்சாலை திட்டம் போன்ற திட்டங்களை தந்துள்ளார். எனவே அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால்தான் விடிவு பிறக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.பேசும்போது " மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு ஆகியவற்றால் திருப்பூர் தொழில்களை முடக்கி விட்டனர். இதனால் தொழில்துறையினர் சாலையில் அமர்ந்து போராடக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறும். மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்வது உறுதி என்றார்.
கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம், பழனிசாமி, மாவட்ட அவைத்தலைவர் சிவாச்சலம், பொருளாளர் கேத்தனூர் கோபால், வீரபாண்டி பகுதி செயலாளர்கள் சுரேந்திரன், 39-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சி.பி.வசந்தாமணி, ஒன்றிய செயலாளர்கள் இளஞ்செழியன், சின்னபாலு, சோமசுந்தரம், நடராஜன், நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர் முருகேசன், பிரனேஷ், அன்பர்ராஜன், பல்லடம் ஒன்றிய செயலாளர் சித்துராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் யு.எஸ்.பழனிசாமி மற்றும் பல்லடம் தண்ணீர் பந்தல் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.