ஆத்தூரில் அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம்:சனாதனத்தை பற்றி பேசி தி.மு.க.வினர் புலி வாலை பிடித்துள்ளனர்முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

Update: 2023-09-07 19:42 GMT

பெத்தநாயக்கன்பாளையம்

ஆத்தூரில் நேற்று நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சனாதனத்தை பற்றி பேசி தி.மு.க.வினர் புலி வாலை பிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு, பணியாளர் பற்றாக்குறை, தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை உள்பட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் முன்னிலை வகித்தார்.

இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆத்தூரில் சுற்றுச்சாலை அமைக்க 100 கோடி ரூபாய் அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டது. அதை நிறைவேற்ற இந்த அரசு முயற்சி செய்யவில்லை.

8 ஆண்டுகள் மின்கட்டணத்தை உயர்த்தாமல் மக்களை பாதுகாத்த அரசு அ.தி.மு.க. அரசு ஆகும். ஆனால் இப்போது மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது தி.மு.க. பழி போடுகிறது. மேலும் பால் விலையையும் உயர்த்தி விட்டனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் கட்சி அ.தி.மு.க. தான்.

புலி வாலை பிடித்துள்ளனர்

உதயநிதி சனாதன தருமத்தை பற்றி எதற்கு பேசவேண்டும். சனாதனத்தை முழுமையாக அறிந்தவர்கள் யாரும் இல்லை. அது ஆண்டாண்டு காலமான பழக்கம். சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு குறித்து மக்கள் கேள்வி கேட்கின்றனர். சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பேசுகிறார். செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

சனாதனத்தை பற்றி பேசி தி.மு.க.வினர் புலி வாலை பிடித்துள்ளனர். அது உங்களை சும்மா விடாது. நீங்கள் சனாதனத்தை பற்றி விவாதிக்க தயாரா?. மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் ஒவ்வொரு கோவிலுக்கும் செல்கின்றனரே, அதனை தடுக்க முடியுமா?

திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். அதனால் தான் அவர் குறித்து ஸ்டாலின் வாய்திறக்க மறுக்கிறார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினைக்கும் அவர் வாய் திறக்க மறுக்கிறார்.

அதிமுக எழுச்சி மாநாட்டை பார்த்து காஞ்சீபுரத்தில் ஒருவர் கூட்டம் நடத்தினார். இயற்கைக்கே பொறுக்கவில்லை. மழையின் காரணமாக யாருமே வரவில்லை. கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு இதுதான் நிலைமை.

ஒரேநாடு, ஒரே தேர்தல் நடத்துவதற்காக ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்துள்ளனர். இதனால் அரண்டுபோன மு.க.ஸ்டாலின் உடனே, ஆட்சியை கலைத்துவிடுவீர்களா என சவால் விடுகிறார். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரியாதா? தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அடுத்த சட்டசபை தேர்தல் நாளையே நடந்தாலும் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கே வரமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

காலிக்குடங்களுடன்...

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, மணி, சித்ரா, நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னத்தம்பி, மாதேஸ்வரன் மற்றும் நகர செயலாளர் மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜராஜ சோழன், இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர்கள் வாசுதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காலிக்குடங்களை உயர்த்தி பிடித்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்