சொத்து குவிப்பு புகார் எதிரொலி:அ.தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் ஆளூர் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 20 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Update: 2023-07-14 20:44 GMT

திங்கள்சந்தை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் ஆளூர் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 20 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பேரூராட்சி முன்னாள் தலைவி

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை குலாலர் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ரோஸ்லின் பிரேமலதா என்ற லதா சந்திரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 21-10-2011 முதல் 30-10-2016 வரை ஆளூர் பேரூராட்சி தலைவியாக இருந்தார். ஆளூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பையும் வகித்துள்ளார்.

தற்போது ஆளூர் பேரூராட்சி நாகர்கோவில் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வீராணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

சொத்து குவித்ததாக புகார்

லதா சந்திரன் பேரூராட்சி தலைவியாக இருந்த காலகட்டத்தில் பேரூராட்சி பகுதிக்கு பல்வேறு பணிகள் நடைபெற்றது. அந்த சமயத்தில் அவர் தனது பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக பணம் சம்பாதித்ததாகவும், சொத்து சேர்த்ததாகவும் அதே பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இதுதொடர்பாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் லதா சந்திரன் மீது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ஆளூர் பேரூராட்சி தலைவி பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக லதா சந்திரன் ரூ.33 லட்சத்து 67 ஆயிரத்து 322 சொத்து சேர்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

லஞ்ச ஒழிப்பு சோதனை

பின்னர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் நேற்று காலையில் லதா சந்திரன் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டில் லதா சந்திரன், அவரது கணவர் சந்திரன் மற்றும் 2 மகன்கள் இருந்தனர். ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. பீரோ உள்ளிட்ட எந்தவொரு பகுதியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விட்டு வைக்கவில்லை.

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 2.30 மணி வரை நடந்தது. அதாவது 8½ மணி நேரம் நடந்த சோதனையின் போது வீட்டில் இருந்த நிலம் மற்றும் சொத்துகள் சம்பந்தமான ஆவணங்கள் உள்பட 20 ஆவணங்களை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் வீட்டில் நடந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதுதவிர செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அ.தி.மு.க.வை சேர்ந்த ஆளூர் பேரூராட்சி முன்னாள் தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

---

Tags:    

மேலும் செய்திகள்