செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-06-22 04:55 IST

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை சீர் செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நா.பாலகங்கா, விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன் உள்பட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கோகுல இந்திரா, மாபா பாண்டியராஜன் உள்பட நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

செங்கல்பட்டு, காஞ்சீபுரம்

இதேபோல் செங்கல்பட்டில் மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அஸ்தினாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் மது பாட்டில்களை மாலை போல கட்டி கழுத்தில் அணிந்தவாறு பங்கேற்றனர்.

காஞ்சீபுரத்தில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையிலும், திருவள்ளூரில் மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூரில் நடைபெற்ற போராட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டார்.

கோவை

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 'தி.மு.க. தனது முழு ஆட்சியை பயன்படுத்தினாலும் செந்தில் பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது' என்று தெரிவித்தார்.

இதேபோல் திருப்பூரில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான கட்சியினர் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்