அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கைபடிவம் வினியோகம்

அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வினியோகத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் தொடங்கி வைத்தனர்.

Update: 2023-04-14 19:00 GMT

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கினர்.

எதிர்க்கட்சியின் இலக்கணம்

இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். எனவே மக்களின் ஆதரவை நாம் பெற வேண்டும். அதோடு அ.தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும். அ.தி.மு.க.வில் உண்மையாக உழைக்கும் அனைவருக்கும் நிச்சயமாக பதவி கிடைக்கும். தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அ.தி.மு.க. செயல்படுகிறது.

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் முகத்திரையை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கிழித்து வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக சட்டப்போராட்டம் நடத்தி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிமுகமாக இருக்கிறார். அ.தி.மு.க.வும், இரட்டை இலையும் நமக்கே சொந்தம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வழிநடத்தி வருகிறார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக அமர வைக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும், என்றார்.

விளம்பரத்தின் மூலம் ஆட்சி

மேலும் நத்தம் விசுவநாதன் பேசுகையில், அ.தி.மு.க.வை பொறுத்தவரை 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கின்றனர். ஆனால் அ.தி.மு.க. பிளவுபட்டதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு மிகவும் ஆற்றல் படைத்த தலைமை கிடைத்து இருக்கிறது. பொதுமக்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். தி.மு.க. அமைச்சர்கள் வாயை திறந்தாலே பொய்யாக தான் பேசுகின்றனர்.

விளம்பரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்றனர். விளம்பரத்தால் ஆட்சியை தக்க வைக்க முடியாது. தி.மு.க. ஆட்சி மீது மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணம் தி.மு.க. ஆட்சி தான். எனவே தமிழகத்தில் அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே அமையும். இதற்காக பல்வேறு திட்டங்களை அவர் வகுத்து வருகிறார். எனவே நமது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும் வரை நாம் உழைத்து கொண்டே இருக்க வேண்டும், என்றார்.

நிர்வாகிகள்

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, பழனிசாமி, நடராஜன், வேணுகோபாலு, பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், பகுதி கழக செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்