அதிகாரிகள் யாரும் என்னை மதிப்பது இல்லை: தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் புறக்கணிக்கிறார்கள்- பண்ணாரி எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

அதிகாரிகள் யாரும் என்னை மதிப்பது இல்லை என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் புறக்கணிக்கிறார்கள் என்றும் பண்ணாரி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-05-18 20:05 GMT

புஞ்சைபுளியம்பட்டி

அதிகாரிகள் யாரும் என்னை மதிப்பது இல்லை என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் புறக்கணிக்கிறார்கள் என்றும் பண்ணாரி எம்.எல்.ஏ. கூறினார்.

பண்ணாரி எம்.எல்.ஏ.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அ.பண்ணாரி. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட மலை கிராமங்கள் அடங்கிய தொகுதி. எனது தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளான ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குதல் உள்பட பொதுமக்களின் பல்வேறு குறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தேன். ஆனால் எனது தொகுதியில் எந்த விதமான பணிகளும் நடக்கவில்லை.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை

பொதுமக்களின் குறைகளும் தீர்க்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை. நான் பரிந்துரை செய்து அனுப்பிய மனுக்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

நேரில் சென்று கேட்டால் உடனடியாக செய்து விடுகிறேன் என அதிகாரிகள் கூறுகின்றனர் ஆனால் நடவடிக்கை எடுப்பது இல்லை. என்னை எந்த அதிகாரிகளும் ஒரு எம்.எல்.ஏ.வாக மதிப்பது இல்லை. அதேபோல் போலீஸ், ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் என்னை புறக்கணித்து வருகிறார்கள்.

குடியேறும் போராட்டம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது கோரிக்கைக்கு மதிப்பு அளிப்பது இல்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பது தான். எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. அதிகாரிகள் என்னை மக்கள் பிரதிநிதியாக பார்க்காமல், சாதி ரீதியாக பார்க்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை அதிகாரிகள் புறக்கணிப்பதை பற்றி பலமுறை மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு உள்ளேன்.

இந்த பிரச்சினை குறித்து நான் சார்ந்து இருக்கும் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லவில்லை. பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த விண்ணப்ப மனுக்கள் மீது 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்