ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விடுதிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதியில் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கு 27 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 23 விடுதிகளும், ஒரு ஐ.டி.ஐ மாணவர் விடுதியும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2023-24-ம் ஆண்டில் புதிதாக மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர்.

மாணவர் சேர்க்கை

பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த விடுதிகளில் சேரலாம். ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 85 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும் இதரவகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படுகின்றனர்.

54 விடுதிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். விடுதிக்கும், மாணவர் வசிக்கும் இடத்துக்கும் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் இருக்கவேண்டும். 5 கிலோ மீட்டர் நிபந்தனை மாணவிகளுக்கு பொருந்தாது. ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

எனவே தகுதி உள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல், நடத்தைச் சான்று, ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்விநிலையத் தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பள்ளி விடுதிகளுக்கு 12-ந் தேதி முதலும், கல்லூரி விடுதிக்கு 19-ந் தேதி முதலும் காப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு https://tnadw-hms.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்