முதுமலையில் விறகு சேகரிக்க சென்ற போது புலி தாக்கி ஆதிவாசி பெண் பலி -வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

முதுமலையில் விறகு சேகரிக்க சென்ற போது ஆதிவாசி பெண் புலி தாக்கி பலியானார். வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-01 18:45 GMT

கூடலூர்

முதுமலையில் விறகு சேகரிக்க சென்ற போது ஆதிவாசி பெண் புலி தாக்கி பலியானார். வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆதிவாசி பெண்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு யானைகளுக்கு உணவு அளிப்பதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

வளர்ப்பு யானைகள் முகாம் பகுதியில் ஆனைப்பாடி ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகிறது. இதே கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மன் என்ற கேத்தன். இவரது மனைவி மாரி (வயது 60). இவருக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விறகு சேகரிக்க வீட்டை விட்டு மாரி வெளியே சென்றார்.

புலி கடித்து பலி

ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிடைக்க வில்லை. இதுகுறித்து முதுமலை வனத்துறையினரிடம் ஆதிவாசி மக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வன ஊழியர்கள் நேற்று காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு புதருக்குள் புலி தாக்கி மாரி பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது உடலில் பல இடங்களில் கடித்து தின்றது தெரிய வந்தது. இதைக் கண்ட ஆதிவாசி மக்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த மசினகுடி போலீசார், முதுமலை வனத்துறையினர் மாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆதிவாசி மக்கள் சாலை மறியல்

இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்தும், உடனடியாக புலியைப் பிடிக்க கோரியும் தெப்பக்காடு பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் காலை 8.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், வனத்துறையினர் அங்கு வந்து ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து கேமராக்களை பொருத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பலியான மாரியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை ஆதிவாசி மக்கள் கைவிட்டனர். பின்னர் மாரியின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

25 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் 25 கேமராக்களை வனப்பகுதியில் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆதிவாசி மக்கள் வனத்துக்குள் தனியாக செல்லக்கூடாது. இரவில் வீடுகளை விட்டு வெளி வரும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். முன்னதாக புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்