ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம்

வால்பாறையில் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-24 19:45 GMT

வால்பாறை

வால்பாறையில் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆதிபராசக்தி கோவில்

வால்பாறை சிறுவர் பூங்கா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அன்னை ஆதிபராசக்தி கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 22-ந் தேதி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாரி கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு மற்றும் பிள்ளையார் வழிபாடு நடத்தப்பட்டது. ேமலும் மூலமூர்த்திகளுக்கு வேள்வி சாலை அமைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் விமான கலசம் நிறுவுதலுக்கு பிறகு ராமேஸ்வரம், கொடுமுடி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆகிய கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகம்

விழா சிறப்பு நாளான நேற்று காலை 8 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு காப்பணிவித்து வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து தீர்த்தக் குடங்கள் கோவிலை சுற்றி எடுத்துச்செல்லப்பட்டு கலச பூஜைகள் நடைபெற்றது. காலை 8.20 மணிக்கு கோவில் கலசங்களுக்கு ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

பெருந்திருமஞ்சன வழிபாடு

இதைத்தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை, பெருந்திருமஞ்சன வழிபாடு, பேரொளி திருமுறை விண்ணப்பம் ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பின்னர் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ராஜன், பொருளாளர் பெயிண்டர் மணி, தர்மகர்த்தா சுகுமார், ஒடும் பிள்ளை அரசு மாரிமுத்து, துணை தலைவர் விஜயகுமார், துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, துணை பொருளாளர் மணிகண்டன், துணை தர்மகர்த்தா அசோக், ஒடும் பிள்ளை கார்த்திக் ஆகியோர் தலைமையில் கோவில் கமிட்டியினர் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்