ஆதிநாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-01 18:45 GMT

திருக்கடையூர்:

ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிநாராயண பெருமாள் கோவில்

ஆக்கூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற ஆதிநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடந்தது.

முன்னதாக கடந்த 30-ந் தேதி முதல் யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றன. நேற்று முன்தினம் மூன்றாம் கால யாக சாலை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. குடமுழுக்கு விழாவான நேற்று காலை ஐந்தாம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேளதாளத்துடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது.

குடமுழுக்கு

பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆதிநாராயண பெருமாள் சன்னதி விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதேபோல் ராஜகோபால பெருமாள், கோதண்டராமர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சாமி சன்னதிகளின் விமான கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. அப்போது கருடன் வட்டமிட அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர்.

தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்- இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் உமேஷ், கோவில் ஆய்வாளர்கள் கண்ணதாசன், பத்திரிநாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் காஞ்சனா மாலா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்