நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பிளஸ்-2 மாணவரிடம் ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் விசாரணை
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பிளஸ்-2 மாணவர் மற்றும் அவரது சகோதரியிடம் ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி நேரில் விசாரணை நடத்தினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணைய உறுப்பினர் ரகுபதி நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர், அவரது தங்கை வீட்டுக்கு சென்று அங்கு அவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டார். மேலும் அந்த ஊரில் சின்னத்துரையுடன் பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
ஆசிரியர்களிடம் விசாரணை
இதுதவிர மாணவர் படித்த பள்ளிக்கூடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தினார்.
பின்னர் ஆணைய உறுப்பினர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரியில் மாணவர், அவருடைய சகோதரி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை சார்பில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று விசாரித்துள்ளேன். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் நல்லப்படியாக உள்ளது.
காரணம் தெரியவில்லை
பள்ளியில் ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டோம். ஆஸ்பத்திரியில் 2 பேருக்கும் டாக்டர்கள் நல்லமுறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் நலம் மேம்பாடு அடைந்துள்ளது. மாணவர் சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். அதற்கு அவர் வெவ்வேறு காரணங்களை கூறிஉள்ளார். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில்தான் குறிப்பிட்ட காரணத்தை கூறிஉள்ளார். அந்த ஊரில் அவரோடு நீண்டகாலமாக பழகிய மாணவர்களிடம் விசாரித்தபோதும் காரணம் தெரியவில்லை.
அடுத்தகட்டமாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனிநபர் விசாரணை ஆணையமும் அமைத்துள்ளார்.
விரைவில் அறிக்கை தாக்கல்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆணையத்திற்கு வந்தால் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரி சம்பவம் தொடர்பாக எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்தின் சார்பில் முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் அரசுக்கு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.