முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு: லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

Update: 2022-08-27 15:01 GMT

முல்லைப்பெரியாறு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் தேவைப்படும்.

இதற்கிடையே நேற்று வரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 955 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அணையில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 955 கனஅடியில் இருந்து 1,866 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மின் உற்பத்தி அதிகரிப்பு

இதன் காரணமாக இன்று காலை 6 மணி முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது 4 ஜெனரேட்டர்களிலும் தலா 42 வீதம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.30 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 973 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,866 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு: பெரியாறு 1, தேக்கடி 6.4, கூடலூர் 4 - 8, உத்தமபாளையம் 2.2, வீரபாண்டி 9, வைகை அணை 8.8, மஞ்சளாறு, சோத்துப்பாறை 27, ஆண்டிப்பட்டி 39.8, அரண்மனைபுதூர் 31, போடி 6.2, பெரியகுளம் 9.

Tags:    

மேலும் செய்திகள்