கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு கூடுதல் சீருடைகள், புத்தகங்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கூடுதல் நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு கூடுதலாக 2 செட் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மாணவர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.