மதுரை-போடி இடையே பாசஞ்சர் கட்டணத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்-பயணிகள் வலியுறுத்தல்
மதுரை-போடி இடையே பாசஞ்சர் கட்டணத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
மதுரை,
மதுரை-போடி இடையே பாசஞ்சர் கட்டணத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பாசஞ்சர் கட்டணத்தில்...
மதுரை-தேனி இடையே எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் போடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரை-போடி ரெயிலை பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க வேண்டும். அத்துடன், மதுரை-போடி இடையே 4 ஜோடி ரெயில்கள் இயக்க வேண்டும் என மதுரை பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட புனலூர் - கொல்லம் இடையேயான மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், முதல் நாளிலேயே அந்த பாதையில் 4 ஜோடி பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல, மதுரை-போடி அகலப்பாதையிலும் கூடுதல் பாசஞ்சர் ரெயில்கள் இயக்க வேண்டும்.
கோவைக்கு கூடுதல் ரெயில்கள்
மதுரையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு ஒரேயொரு பாசஞ்சர் ரெயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே அந்த பாதையில் கூடுதல் ரெயில்களை பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க வேண்டும். தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மாநிலத்திற்கு கூடுதல் ரெயில்களும், ஒரு மாநிலத்திற்கு பெயரளவுக்கு ஒரேயொரு ரெயில் இயக்குவது என்பது அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கையாகும் என்றும் பயணிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது. எனவே, மதுரை-போடி, மதுரை-பொள்ளாச்சி-கோவை இடையே கூடுதல் ரெயில்கள் பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.