தாரமங்கலம் நகராட்சிக்கு 3 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் கூடுதலாக வினியோகம்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, தாரமங்கலம் நகராட்சிக்கு் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-05-31 21:15 GMT

தாரமங்கலம், 

குடிநீர் தட்டுப்பாடு

தாரமங்கலம் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் பொதுமக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில் 24 மணிநேரமும் காவிரி குடிநீர் கிடைக்கும் வகையில் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் நேரில் வந்து அந்தப்பகுதியை பார்வையிட்டு குடிநீர் வினியோக திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

3 லட்சம் லிட்டர் தண்ணீர்

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட நிர்வாகம் மேட்டூரில் இருந்து சேலம் மாநகராட்சிக்கு செல்லும் காவிரி குடிநீர் இணைப்பில் இருந்து தாரமங்கலம் நகராட்சி பகுதிக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய் துள்ளது. இதுபற்றி நகராட்சி தலைவர் குப்பு என்ற குணசேகரன் கூறியதாவது:-

தாரமங்கலம் நகராட்சிக்கு கூடுதலாக கிடைக்கும் 3 லட்சம் லிட்டர் குடிநீரை தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து நகராட்சி பொதுநிதியில் 20-வது வார்டு கிழக்கு பாவடி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 10, 20, 21, 27 ஆகிய வார்டு பகுதி பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும். கூடுதலாக கிடைக்கும் 3 லட்சம் லிட்டர் குடிநீரை சுழற்சி முறையில் அனைவருக்கும் வழங்கி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், நகராட்சி துணைத்தலைவர் தனம், இளநிலை உதவியாளர் ராமன், துப்புரவு ஆய்வாளர் கோபிநாத், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்