சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவா நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை
சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவா நகரங்களுக்கு கூடுதலாக விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், மதுரையில் இருந்து சென்னைக்கு 6 விமானங்களும் என 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் நேற்று முதல் கூடுதலாக சென்னை- மதுரை இடையே 2 விமானங்களும், மதுரை- சென்னை இடையே 2 விமானங்களும் என 4 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 16 விமான சேவைகளாக இயக்கப்படுகிறது. இது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி
அதேபோல் சென்னை- கொச்சி இடையே தினமும் 4 விமான சேவைகளும், கொச்சி- சென்னை இடையே 4 விமான சேவைகளும் என 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை-கொச்சி இடையே கூடுதலாக ஒரு விமான சேவையும், கொச்சி-சென்னை கூடுதலாக ஒரு விமான சேவையும் என மொத்தம் 10 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவா
மேலும் சென்னையில் இருந்து கோவாவுக்கு காலை ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகளும் கோவாவில் இருந்து சென்னைக்கு 2 விமான சேவைகளும் இருந்தன.
கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் நேற்று முதல் மதியம் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கு கூடுதலாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. அந்த விமானம் மாலை 6.55 மணிக்கு கோவாவில் இருந்து மீண்டும் சென்னை வந்தடைகிறது.
இதன் மூலம் சென்னை- கோவா இடையே 6 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.