வெளிநாட்டினர் உள்ள சிறப்பு முகாமில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆய்வு
வெளிநாட்டினர் உள்ள சிறப்பு முகாமில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆய்வு செய்தனர்.
சிறப்பு முகாமில் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி கூடுதல் டி.ஜி.பி. சங்கர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நேற்று மாலை திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமிற்கு சென்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை வளாகத்துக்கு சென்ற கூடுதல் டி.ஜி.பி. சங்கர், மாநகரத்தில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் இருசக்கர ரோந்து வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போலீசாருக்கு அறிவுரை
அப்போது அவர் பேசுகையில், "போலீஸ் நிலையத்தில் ரோந்து போலீசாரை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். ரோந்து அதிகாரிகள் நகர்ந்து கொண்டே இருந்தால்தான் குற்றங்கள் குறைந்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ரோந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு ரோந்து போலீஸ்காரர் தவறு செய்தாலும் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் உருவாக்கும். பிரச்சினைக்குரிய இடத்துக்கு செல்லும்போது, உடலில் பொருத்தக்கூடிய கேமராவை கண்டிப்பாக பொருத்தி செல்ல வேண்டும்" என்று அறிவுரை வழங்கி பேசினார். தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் அவர் மரக்கன்றுகளையும் நட்டார். பின்னர் அவர் கண்டோன்மெண்டில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, அங்கு கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.