நீரேற்று நிலையத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து குடிநீர் நீரேற்று நிலையத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-20 23:30 GMT

பொள்ளாச்சி

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து குடிநீர் நீரேற்று நிலையத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒரு சில கிராமங்களில் குடிநீர் வந்து ஒரு மாதம் வரை ஆவதாக புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அம்பராம்பாளையம் ஆழியாற்றில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் நேற்று கோவை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரி (கூடுதல் கலெக்டர்) அலர்மேல்மங்கை தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கண்டனர்.

அப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு எவ்வளவு என்பது? குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

குழாய் உடைப்பு

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அம்பராம்பாளையத்தில் இருந்து ஆவல் சின்னாம்பாளையம் வரை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் மின்தடை காரணமாகவும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. தற்போது குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்