நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடையஅனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் அறிவுரை

அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பேசினார்.

Update: 2023-09-22 20:48 GMT

நாகர்கோவில்:

அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

குமரி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் அனைத்துத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்களை புன்சிரிப்புடன் பெற்றுக்கொண்டு, கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை இடர்பாடுகள், மீனவர் பிரச்சினை அதிகமாக உள்ளது. முதல்- அமைச்சர் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக கடைநிலை அலுவலர்களிடமும் பிரச்சினைகள் குறித்து விசாரித்து வருகிறார்கள். ஆகவே அனைத்து அலுவலர்களும் தங்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரிடர் மீட்பு ஒத்திகை

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி வாயிலாக பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்படும் மீட்புபணிகள் குறித்தும், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், விபத்தில் இருந்து எப்படி காப்பாற்றி கொள்வது என தீயணைப்பு வீரர்கள் தத்துவமாக செய்து காண்பித்தனர். அவற்றை பார்வையிட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தீயணைப்பு வீரர்களை பாராட்டினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

--

Tags:    

மேலும் செய்திகள்