பள்ளிக்கூடத்துக்கு சென்று வர கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் மனு

பள்ளிக்கூடத்துக்கு சென்று வருவதற்கு வசதியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-08-22 20:06 GMT

பள்ளிக்கூடத்துக்கு சென்று வருவதற்கு வசதியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் அதிகமான பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுகின்றது. இந்த பள்ளிகளில் படிப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் நாள்தோறும் காலை முதல் பஸ்களில் வர தொடங்குகின்றனர். மாணவ மாணவிகள் பள்ளியின் சீருடை அணிந்து இருந்தால் அரசு பஸ்சில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வருவதற்கு மீண்டும் பஸ்களை இயக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கூடுதல் பஸ்கள்

பாளையங்கோட்டையில் செயல்படும் பள்ளிகளில் நொச்சிகுளம், சமத்துவபுரம், கிருஷ்ணாபுரம், ஆரோக்கியநாதபுரம், வி.எம்.சத்திரம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறோம். நாங்கள் நெல்லை சந்திப்பு வரை இயக்கப்படும் அரசு பஸ்களில் ஏறி பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தோம். முன்பு இந்த வழித்தடத்தில் காலை 9 மணிக்குள் 3 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1 பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பஸ் கண்டக்டர்கள் மாணவிகளை மரியாதை குறைவாக நடத்துகின்றனர்.

இந்த பிரச்சினையால் மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து காலை நேரத்தில் பள்ளி செல்லும் நேரங்களில் வழக்கம் போல் 3 பஸ்களை இயக்க வேண்டும். மாணவிகளை தரக்குறைவாக பேசும் கண்டக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்