லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்கம்
முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மறுநாளே லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மறுநாளே லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதல்-அமைச்சரிடம் கோரிக்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் அவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆலங்குடி மகாஜனம் செங்கரையூர் கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய செல்லும் வழியில் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் காரை நிறுத்தி அங்கிருந்த மக்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது, கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பள்ளி மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் பஸ்வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் பஸ் வசதி
இந்த கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் லால்குடி ஆலங்குடி மகாஜனத்திற்கு உடனடியாக கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை 8 மணி அளவில் புதிய பஸ் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் இருந்து லால்குடிக்கு இயக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளர் புகழேந்தி, துணை மேலாளர் வணிகம் சங்கர், கிளை மேலாளர் செல்வபூபதி, போக்குவரத்து ஆய்வாளர் கலைவாணன் மற்றும் ஆலங்குடி மகாஜன கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கிராம மக்கள் பஸ்சில் ஏறி நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த பஸ் லால்குடியில் இருந்து தினமும் காலை 6 மணி, 8 மணி, 11.35 மணி, மதியம் 1.50 மணி, மாலை 4.20 மணி, 5. 30 மணி, இரவு 7.50 ஆகிய நேரங்களில் மகாஜன கிராமத்திற்கு இயக்கப்படுகிறது. முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மறுநாளே பஸ் இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்தை சேர்ந்த பிரேமா கூறும்போது, பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. எங்கள் கிராமம் வழியாக வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். கோரிக்கை வைத்த மறுநாளே பஸ் இயக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்ெகாள்கிறோம், என்றார்.
பள்ளி குழந்தைகளுக்கு பயன்
மகாராணி என்ற பெண் கூறும்போது, முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்த உடன் பஸ்கள் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோரிக்கை வைத்த உடனே பஸ் இயக்கிய முதல்-அமைச்சருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம், என்றார்.