பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு 15 கோடியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பேர் பயிற்சி பெறும் வகையில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-07-11 10:05 GMT

சென்னை:

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு அரசு அலுவலர்கள், இளநிலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு துறை ரீதியிலான அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி நிலையம் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படுகிறது.

பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சுமார் 700 நபர்கள் தங்கி அடிப்படை பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் நான்கு நவீன வகுப்பறைகள், இரண்டு தங்கும் விடுதிகள், ஒரு உணவருந்தும் கூடம், ஒரு பல்நோக்கு அரங்கம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்