ரூ.9 கோடியில் கூடுதல் கட்டிடம்

ரூ.9 கோடியில் கூடுதல் கட்டிடம்

Update: 2022-07-11 12:54 GMT

உடுமலை

உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.9 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் மருத்துவ மனை கட்டிட கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவமனை

உடுமலை வ.உ.சி. வீதியில் அரசு மருத்துவ மனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு பழுதடைந்துவிட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கு மருத்துவ பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் டாக்டர் குடியிருப்பாக இருந்துவந்த பழைய கட்டிடம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த இடத்தில் ரூ.9கோடி மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து பழுதடைந்த பழைய கட்டிடம் மற்றும் அதற்கு அருகில் இருந்த கட்டிடம் ஆகியவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

மருத்துவ வசதிகள்

புதியதாக கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடம் தரைத்தளம், முதல் தளம் மற்றும்2-வது தளம் ஆகியவற்றை கொண்டது. ஒவ்வொரு தளமும் தலா 8,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும். அத்துடன் ஒவ்வொரு தளத்திலும் தலா 3,200 சதுர அடி பரப்பளவில் சாய்தள நடைபாதை கட்டப்படும். தரைதளத்தில்

600 சதுர அடியில் போர்டிகோ கட்டப்படும். இந்த புதிய கட்டிடத்தில் லிப்ட் வசதியை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது.

கூடுதல் கட்டிடத்தின் தரைத்தளத்தில் சுமார்25படுக்கை வசதிகளுடன் விபத்து மற்றும் அவசரசிகிட்சைபிரிவு இடம்பெறும். அத்துடன் டாக்டர்கள் அறையும், செவிலியர்கள் அறையும் இடம்பெறும்.

முதல்தளத்தில் டயாலிசிஸ் யூனிட் அறை இடம்பெறும். இங்கு ஒரே நேரத்தில் 6பேருக்கு டயாலிசிஸ் செய்யக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்படும்.அத்துடன் டயாலிசிஸ் செய்துகொள்ள வரும்நோயாளிகளுக்கு,

டயாலிசிஸ் செய்த பின்பு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக 18படுக்கை வசதிகள் செய்யப்படும்.

2-வதுதளத்தில் ஐ.சி.யு.வார்டு-1 மற்றும்அறுவை சிகிச்சை அரங்குகள்-2, மற்றும் டாக்டர்கள் அறை, செவிலியர்கள் அறை ஆகியவை இடம்பெறும். ஒவ்வொரு தளத்திலும் கழிப்பறைகளும் இருக்கும்.

இந்த புதிய கூடுதல் கட்டிட முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.கட்டிட கட்டுமானப்பணிகளை 15மாதங்களில் முடிக்கபொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்