கோழித்தீவனத்தில் தாவர எண்ணெய் சேர்க்க வேண்டும்
முட்டை உற்பத்தி குறைபாட்டை தீர்க்க கோழித்தீவனத்தில் தாவர எண்ணெய் சேர்க்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முட்டை உற்பத்தி குறைபாட்டை தீர்க்க கோழித்தீவனத்தில் தாவர எண்ணெய் சேர்க்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு இல்லை
நாமக்கல்லில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். 3 நாட்களும் காற்று மணிக்கு முறையே 4, 4, 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் இரவு வெப்பம் குறைந்தும், பகல் வெப்பம் சற்று உயர்ந்தும் காணப்பட்டு, பின் பனிக்காலமாக நிலவும். பின் பனிக்காலத்தில் வெப்ப அளவுகள் உயர்வதும், குறைவதும் மாறி, மாறி காணப்படுவது இயல்பே. இந்த வானிலையில் கோழிகள் மற்றும் கறவை மாடுகள் அயற்சியினால் பாதிக்கப்படுவதும் இயல்பான ஒன்று.
தாவர எண்ணெய்
கோழிகளில் அதிக தீவன எடுப்பு, முட்டை உற்பத்தி குறைபாடு ஆகியவையும், மாடுகளில் பால் உற்பத்தி குறைந்து கொழுப்பு குறைவதும் காணப்படும். கோழிகளுக்கான தீவனத்தில் தாவர எண்ணெய் டன்னிற்கு 5 கிலோ சேர்ப்பதும், கறவை மாடுகளின் கொட்டகையை குளிர்ந்த காற்றின் பாதிப்பு இல்லாமல் படுதாவை கொண்டு தடுக்க வேண்டும்.
தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு மேய செல்லும் ஆடு, மாடுகளுக்கு நத்தைகள் மூலம் பரவும் தட்டைபுழுக்களின் தாக்கம் காணப்படும். எனவே சாணத்தை பரிசோதனை செய்து கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி குடற்புழு நீக்கம் செய்யலாம். மேலும் இப்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த கால்நடைகளை நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.