'இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன்.. கர்நாடகத்தில் வழக்கு போடுவேன்' - விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோ
சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் கொடுத்தார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது கொலை மிரட்டல், மோசடி, கற்பழிப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையின்போது, அவசரப்பட்டு, பிறர் பேச்சை கேட்டு புகார் கொடுத்துவிட்டேன். இந்த புகாரை திரும்ப பெறுவதாக விஜயலட்சுமி எழுதிக்கொடுத்தார். மேலும் அவர் கர்நாடகா செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி சர்சையை கிளப்பியுள்ளார். அவர் அந்த வீடியோவில் '12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் நான் போராடி கொண்டிருக்கிறேன். சீமான் விவகாரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க எனது புகாரை தீவிரமாக விசாரித்து நியாயம் வாங்கி தந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.
இந்த மார்ச் மாதம் மதுரை செல்வம் முன்னிலையில் சீமான் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது மனைவி கயல்விழிக்கு தெரியாமல் ரூ.50,000 பணம் கொடுக்க வந்தார். வீடியோ, போட்டோ ஆதாரங்களை வாங்கிவிட்டு மிரட்டினார். இது அனைவருக்கும் தெரிந்திருந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
2011ம் ஆண்டு என்னுடைய வழக்கை வைத்து அதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக்கொண்டது. வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது திட்டமிட்டு இருந்தால் யாருக்கும் நான் ஒத்துழைக்க மாட்டேன்.
இதே தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து தமிழ்நாட்டில் நான் வாழ்வதற்கு கூட வீடு தரவில்லை. தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடகா என்னைக் காப்பாற்றியது. கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, 12 வருடங்களாக எனக்கு நியாயம் தேடித் தராமல் அலைக்கழிக்கிறார்கள். இதற்கு நான் முடிவு கட்டுவேன்.
12 வருடங்களாக என்னிடம் தமிழ்நாடு போலீசார் ஆதாரங்களை வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்காமல், என் போனையும் கொடுக்காமல் உள்ளனர் என கர்நாடகா கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்ய உள்ளேன். அன்றைக்குத்தான் சீமான் - விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும். யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன். நான் இதை விடவே மாட்டேன்' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.