நடிகர்கள் விஜய், அஜித் அரசியலுக்கு வர வேண்டும்; அர்ஜூன் சம்பத் சொல்கிறார்

நடிகர்கள் விஜய், அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று கொடைக்கானலில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2023-06-18 21:00 GMT

இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், கொடைக்கானலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

யோகா கலை குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அரசு அலுவலர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க இந்து மக்கள் கட்சி சார்பில் போதை மறுவாழ்வு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 'மீண்டும் மோடி வேண்டும் மோடி' என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற இந்து மக்கள் கட்சி தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்க உள்ளது.

அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி முதல் லஞ்சம், ஊழலுக்கு எதிராக அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்க உள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதியாக உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை, அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இந்தியா முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும். நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் அரசியலுக்கு வரவேண்டும். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. எனவே விஜய் தனிக்கட்சி தொடங்கினாலும், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரவேண்டும். அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்