நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது - விடுதலை சிறுத்தைகள் கட்சி டுவீட்
நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை,
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.
முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.
நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்றார்.
இந்நிலையில், நடிகர் விஜய் பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ-மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அதுவும் திரு. விஜய் அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்…
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.