கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறையில் கோடை கிரிக் லே-அவுட் பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு 13 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் பாபி சிம்ஹாவிடம் வீடு கட்டி தருவதாக கொடைக்கானலை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஜமீர் ரூ.1 கோடியே 70 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர், வீட்டை கட்டி முடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி கொடைக்கானல் வந்த பாபி சிம்ஹா, வீட்டு வேலையை முடித்து தரும்படி ஜமீரிடம் கேட்டார். அப்போது பாபி சிம்ஹாவிடம் ஜமீர், அவரது தந்தை காசி முகமது, உறவினர் உசேன் மற்றும் பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாபி சிம்ஹாவை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானல் கோர்ட்டில் நடிகர் பாபி சிம்ஹா புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஜமீர் உள்பட 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.