தரமற்ற பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்

நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூட வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் தரமற்ற பொருட்கள் இருப்பின், உணவு பாதுகாப்புத்துறையின் மூலமாக சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-17 19:30 GMT

விழிப்புணர்வு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையத்தின் மூலம் நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் வாகனத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் பிரபுசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் எனப்படும் புட் சேப்டி ஆன் வீல்ஸ் வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சேலம் மண்டலத்திற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரிசோதனை முடித்து தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கும் பொருட்டு கரூர் மாவட்டத்திற்கு நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த வாகனத்தில் பொதுமக்கள், உணவு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உணவு பொருட்கள் பெறப்பட்டு, அதனை பரிசோதனை செய்து அவ்விடத்திலேயே அறிக்கை அளிக்கப்படும். அவ்வாறு அளிக்கப்படும் அறிக்கையில் தரமற்ற பொருட்கள் இருப்பின், உணவு பாதுகாப்புத்துறையின் மூலமாக சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்களது புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமும் தெரிவிக்கலாம்.

மேலும் இந்த வாகனத்துடன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களின் முகப்பு சீட்டில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விவரங்களை பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்குவார்கள். உணவில் கலப்படம் குறித்து கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனைகளை இந்த வாகனத்துடன் வரும் உணவு பகுப்பாய்வாளர் பொதுமக்கள், உணவு வணிகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு செய்து காட்டுவார்கள் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் பகுப்பாய்வு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்