வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2023-08-16 17:46 GMT

செம்மொழி மாநாடு

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்த 6 ஆயிரத்து 500 சதுர அடியில் தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிதி ஆதாரத்தை பொறுத்து கூடுதல் கட்டிடத்திற்கான வசதி ஏற்பாடு செய்யப்படும். மேலும் இந்த அச்சகத்திற்கு நவீன வசதி கொண்ட எந்திரங்கள் வாங்கப்படும். மன்னர் ராஜகோபால தொண்டைமான் நினைவாக அருங்காட்சியகம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்க ரூ.3 கோடியே 2 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செம்மொழி மாநாடு மீண்டும் நடத்துவது தொடர்பாக இப்போதைக்கு திட்டம் ஏதும் இல்லை. முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதுகுறித்து கேட்டுக்கொள்ளலாம்.

தமிழில் கையெழுத்து

தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பள்ளிகளில் தமிழ் வழி பாடத்திட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறையினர் முடிவெடுக்கின்றனர். தேவைப்படும் பட்சத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்படும். செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில் குறள் பீட விருது வழங்குவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைக்க காலதாமதமானது. மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெற்று விருதுகள் வழங்கப்படும். அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பமிடுவது தொடர்பாக அரசாணை அறிவிப்பு உள்ளது.

வணிக கடைகள்

வணிக வளாகங்கள், வணிக ரீதியான கடைகளின் பெயர் தமிழில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தமிழ் வளர்ச்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் பெயர் எழுதாத வணிக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 10 நாட்களுக்குள் தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு அனைத்து வணிக ரீதியான கடைகளில் தமிழில் பெயர் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு படிப்படியாக பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக அரசு கிளை அச்சகத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மணிமண்டபம்

இதேபோல புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க உள்ள இடத்தையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டார். மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்