பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

Update: 2022-09-19 18:45 GMT

சித்தோடு அருகே பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

விவசாயம் பாதிப்பு

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தாளவாடி வட்டார விவசாயிகள் சங்க தலைவர் மாணிக்கம் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், "தாளவாடி அருகே மல்லன்குழி ஊராட்சி அருள்வாடி கிராமத்தில் நாகபுர மாதேஸ்வரா கோவில் அருகே செண்டுமல்லி பூ தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு விரிவாக்கப்பணி நடக்கிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் வாயு காரணமாக காற்று மாசுபடுகிறது. குடிநீர், ஆழ்துளை கிணற்று குடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயமும் பாதிக்கிறது. எனவே ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

மோசடி

சித்தோடு அருகே நல்லகவுண்டன்பாளையம் கன்னிமாகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் பள்ளிக்கூட சீருடை அணிந்த குழந்தைகளையும் உடன் அழைத்து வந்தார்கள். அவர்கள் கொடுத்த மனுவில், "நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் தனியார் பட்டா நிலத்தை புறம்போக்கு நிலம் என்று சொல்லி, விலையில்லா பட்டா வாங்கி கொடுப்பதாக சிலர் எங்களிடம் பணம் வாங்கினார்கள். அவர்களை நம்பி ரூ.50 ஆயிரம் வரை வழங்கினோம். ஆனால் பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

நம்பியூர் அருகே உள்ள கெடாரை ஆலமரத்து கருப்பராய சாமி திருப்பணிக்குழுவினர் கொடுத்த மனுவில், "கெடாரை ஆலமரத்து கருப்பராய சாமி கோவிலில் கடந்த 15 ஆண்டுகளாக அமாவாசை நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.

அன்னதானத்துக்கு தடை

ஆனால் அங்குள்ள சிலர் கோவிலின் அறையை பூட்டி வைத்துவிட்டு அன்னதானம் வழங்குவதை தடை செய்து வருகிறார்கள். தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

ஈரோடு அருகே லக்காபுரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவர் கொடுத்த மனுவில், "நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எங்களிடம் வீட்டுமனை வாங்கி, விற்றவர்கள் நிலத்தின் வரன்முறை கேட்டு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் அவர் கடந்த 6 மாதங்களாக வரன்முறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வரன்முறை செய்து கொடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தார்.

டாஸ்மாக் கடை

அந்தியூர் தாலுகா பட்லூர் சமையதாரனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முருகேசன் என்பவர் கொடுத்த கோரிக்கை மனுவில், "பொது வழியில் தோண்டப்பட்ட குழியை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கொடுத்த மனுவில், "முருங்கதொழுவு பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்டு உள்ள கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் சென்னிமலை அருகே ஒட்டப்பாறை ரோடு மல்லிகைநகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது", என்று கூறிஇருந்தார்.

217 மனுக்கள்

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 217 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த முருகன் மரணம் அடைந்ததால், வாரிசுதாரரான அவரது மனைவி நந்தினிக்கு கருணை அடிப்படையில் இரவு காவலர் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டா்களின் நேர்முக உதவியாளர்கள் குமரன் (பொது), ஜெகதீஷ் (வளர்ச்சி), மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்