நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-04-29 18:45 GMT

சிவகங்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சார்பில் பயிர் இழப்பீடு, பி.எம்.கிசான் உதவித்தொகை, பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோருதல் போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விவரங்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி தமிழ்நாடு முதல் - அமைச்சர் வேளாண் மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் செய்ய அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்திலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

உழவர் இதழ்

மேலும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் வினியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் வேளாண்மை துறையின் மூலமாக வெளியிடப்படும் உழவர் இதழினை கலெக்டர் வழங்க அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகநாதன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா மற்றும் முதல்நிலை அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்