இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை
ஆழியாறு, கோட்டூரில் இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை
ஆழியாறு, கோட்டூரில் இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகதிகள் முகாம்
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பூளுவாம்பட்டி, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு அகதிகள் மறுவாழ்வுக்காக வீடு கட்டி கொடுக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட அகதிகள் மறுவாழ்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
இலங்கை அகதிகளுக்கு கோட்டூர், ஆழியாறு பகுதியில் தனிவீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. இதற்காக ஒரு பிளாக்கில் 4 வீடுகள் வீதம் கோட்டூரில் 112 வீடுகளும், ஆழியாறில் 160 வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
விரைவுபடுத்த நடவடிக்கை
இதில் கோட்டூரில் கட்டுமான பணிகள் 90 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துள்ளது. வர்ணம் தீட்டும் பணி உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்தது இலங்கை அகதிகளுக்க ஒப்படைக்கப்படும். ஆழியாறு பகுதியில் கட்டப்படும் வீடுகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த பணிகளையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலங்கை அகதிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டப்பணிகளும் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செய்து கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.