4-வது வார்டுக்கு தனி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை

ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டுக்கு தனி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுன்சிலர் தனபாண்டியம்மாள் மணிகண்டன் தெரிவித்தார்.

Update: 2023-01-14 18:45 GMT

ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டுக்கு தனி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுன்சிலர் தனபாண்டியம்மாள் மணிகண்டன் தெரிவித்தார்.

4-வது வார்டு

ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள். இவர் இப்பகுதியை சேர்ந்த பிரபல மக்கள் சேவகர் ஜே.ஆர்.பி.மணிகண்டனின் மனைவி ஆவார். 4-வது வார்டில் அரண்மனை கிழக்குத்தெரு, வடக்குத்தெரு யானைக்கல்வீதி, நீலகண்டி ஊருணி பகுதியை உள்ளடக்கிய மதுரைவீரசாமி கோவில்தெரு, அவ்வையார் தெரு, தலைமை தபால்நிலைய தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த வார்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கவுன்சிலர் தனபாண்டியம்மாள் மணிகண்டன் கூறியதாவது:-

நீலகண்டி ஊருணி பகுதியை சுத்தம் செய்து பெரிய கண்மாயில் இருந்து வரக்கூடிய கால்வாயையும் சீரமைத்து வைகை தண்ணீரை ஊருணியில் நிரப்பி உள்ளோம். செய்யது அம்மாள் அறக்கட்டளை மூலம் ஊருணியை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. ஊருணியை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கவும் படித்துறை அமைக்கவும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தேன். இதை ஏற்றுக்கொண்ட காதர்பாட்சா முத்துராமலிங்கம் நகராட்சி தலைவர் கார்மேகம் மூலம் உடனடியாக மதிப்பீடு தயார் செய்து சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து உடனே நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

இதன்மூலம் நீலகண்டி ஊருணி மழைநீர் சேகரிப்பு மையமாக மாறுவதுடன் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை செறிவூட்ட உதவியாக இருக்கும். அதே போல இந்த வார்டுக்கு உட்பட்ட அல்லிக்கண்மாய் ஊருணியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த கண்மாய்க்கு செல்லும் கால்வாய்களை தூர்வாரி அதிலும் பெரிய கண்மாய் தண்ணீரை நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்.

2 அங்கன்வாடி மையங்கள்

முத்துதேவன்சந்து, போஸ்ட் ஆபீஸ் தெருக்களில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தங்கவேல்சாமி வடக்குத்தெருவில் இயங்கி வந்த தாய்சேய் நல விடுதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளேன். இந்த வார்டில் 2 அங்கன்வாடி மையங்கள், 2 தாய் சேய் நல விடுதிகள் உள்ளன. புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளேன்.

பொதுமக்கள் வசதிக்காக ஈமக்கிரியை செய்ய நீர்மாலை எடுப்பதற்கு நீலகண்டி ஊருணி கரையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பிளாஸ்டிக் தொட்டி அமைத்து தண்ணீர் குழாய்கள் அமைக்கப்படும். வார்டில் புதியதாக எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய ரேஷன்கடை

4-வது வார்டில் உள்ள பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து சீரான குடிநீர் வினியோகம் வழங்க நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளேன். 2-வது 3-வது 4-வது வார்டுகளுக்கு ஒரே ஒரு ரேஷன்கடை உள்ளது. அந்த கடையில் 1,500-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் உள்ளதால் ரேஷன்பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். 4-வது வார்டுக்கென தனியாக புதிய ரேஷன்கடை அமைக்க அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். அதற்கான இடம் தேர்வு செய்து வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ரேஷன் கடை அமைக்கப்படும்.

4-வது வார்டுக்கு உட்பட்ட சாலைகள் அனைத்தையும் சீரமைக்க தேவையான இடங்களில் பேவர்பிளாக் சாலை, சிமெண்டு சாலை, தார் சாலை அமைக்கவும், வார்டு பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கவும், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்கப்படும். 60 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 40 பேருக்கு விதவைகள் உதவித்தொகை பெற்று தந்து உள்ளேன். எனது மக்கள் சேவைகளுக்கு வார்டு பகுதி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன். இப்பகுதி மக்களுக்கு சேவை புரிய ஆதரவளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணை தலைவர், ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

========

Tags:    

மேலும் செய்திகள்