இலவம் பஞ்சு கொள்முதல் செய்ய நடவடிக்கை

Update: 2022-12-16 19:00 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

வடகிழக்கு பருவமழையால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு மகசூல் அதிகரிக்க தரமான கரும்பு ரகங்கள் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தினர் பயிர்க்கடன் வழங்க காலதாமதம் செய்யக்கூடாது. கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் வாங்கும் போது உரம் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளும் செயற்கை உரம் வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

18-ம் கால்வாயில் 40 கன அடி தண்ணீர் தான் வருகிறது. அதை அதிகரிக்க வேண்டும். தெப்பம்பட்டி கண்மாய்க்கு ஒட்டணையில் இருந்து பாசன வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். பருத்தி பஞ்சு கொள்முதல் செய்வது போன்று இலவம் பஞ்சு கொள்முதல் செய்ய வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் விலை உயர்ந்த மரங்களை வளர்க்க அனுமதி அளிக்க வேண்டும்.

கண்ணகி கோவில்

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்கு குமுளி வழியாக செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு முதல் கூடலூரில் இருந்து ஜீப்பில் செல்வதற்கு அனுமதி வேண்டும். போடி ஊத்தாம்பாறைக்கு செல்லும் சாலை அமைத்து 3 ஆண்டுகளில் உருக்குலைந்து கிடக்கிறது. அந்த சாலையை சீரமைக்க வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்