அனைத்து மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை

கல்வராயன்மலையில் அனைத்து மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

Update: 2022-09-11 16:50 GMT

கச்சிராயப்பாளையம்

ஆலோசனை கூட்டம்

கல்வராயன்மலை வெள்ளிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கல்வராயன்மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 15 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வீட்டு மனைப்பட்டா

கல்வராயன் மலைவாழ் மக்களின் முக்கிய தேவையான சாதிச் சான்றிதழ், வீட்டு மனைப்பட்டா கிடைத்திட ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மக்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், வீட்டுமனை பட்டா விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேதமடைந்த சாலைகள் மற்றும் புதிய சாலைகள் தேவைப்படும் பட்சத்தில் அதன் விவரங்களையும் சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். மின்சார வசதி இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக மின்சார வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள்தோறும் குடிநீர் வழங்குவதற்கு அனைத்து தலைவர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.

திறன் பயிற்சி

கல்வராயன்மலைப்பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். இங்குள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளையும் ஆய்வு செய்து அவற்றை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பு தேடி பிற மாவட்டங்களுக்குச் செல்வதை தவிர்த்து, இப்பகுதியிலேயே வேலை வாய்ப்பு உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மேலும், இப்பகுதி குளிர்பிரதேசமாக இருப்பதால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே இவ்விடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக பராமரித்து, குளோரினேஷன் செய்து குடிநீர் விநியோகம் செய்வதை ஊராட்சிமன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு பேரணி

முன்னதாக, நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்யாணிகிருஷ்ணன், ரத்தினம், சீனிவாசன், அர்ச்சனா, லட்சுமணன் உள்ளிட்ட பதினைந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியர் திரு.சையது அப்துல்காதர், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்