பயிர்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை

விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-02-07 18:45 GMT

திருவெண்காடு:

விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அவை கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் முத்துக்குமர சாமி வரவேற்றார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

பயிர்க்காப்பீட்டு தொகை

ரீமா (அ.தி.மு.க.):- கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி ஒன்றியத்துக்குட்பட்ட 14 ஊராட்சிகளில் பயிர்க்காப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படவில்லை, எனவே வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயகுமார் (அ.தி.மு.க.):- திட்டை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையம்

சிவக்குமார் (ஒன்றிய பொறியாளர்):- திட்டை சாலை நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய சாலை அமைத்திட டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

தென்னரசு (தி.மு.க.):- எடக்குடி வடபாதி பகுதியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்த ஒன்றியக்குழு தலைவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்மை துறையினர் கிராமங்களில் துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

இளங்கோவன் (ஒன்றிய ஆணையர்):- அனைத்துத்துறை அதிகாரிகளும் ஊராட்சிகளில் தங்கள் துறை மூலம் செய்யப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு உரிய தகவல்களை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கமலஜோதி தேவேந்திரன் (ஒன்றியக்குழு தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றியக்குழு கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தீர்மானம்

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள் விஜயஸ்வரன், ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் நிலவழகி கோபி, வள்ளி வேலுசாமி, ஜான்சிராணி, ஒன்றிய பொறியாளர் தெய்வானை, வேளாண்மை துறை உதவி அலுவலர் சேகர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய உதவி பொறியாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்