போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை - தலைமைச்செயலாளர் அறிவுறுத்தல்

போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத்துறை செயலாளர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-05-18 00:34 GMT

தமிழ்நாட்டில் நிலவி வரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறை அரசு செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் தலைமைச்செயலாளர் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்கவேண்டும் என்றும், தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய்த்துறை ஆணையர் பிரபாகர் எடுத்துக்கூறினார்.

அவர் கூறியதாவது:-

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லவேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.

இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

வெளியில் செல்லும்போது காலணிகளை அணியவேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்லவும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

மேலும் செய்திகள்