மூடப்பட்ட வட்டக்கானல், பியர்சோலா அருவிகளை திறக்க நடவடிக்கை
கொடைக்கானல் வனப்பகுதியில் மூடப்பட்ட வட்டக்கானல், பியர்சோலா அருவிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட வன அலுவலர் கூறினார்.
அடிப்படை வசதிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலராக பணிபுரிந்து வந்த டாக்டர் திலீப் சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவுக்கு மாற்றப்பட்டார். இதனை அடுத்து நாகப்பட்டினத்தில் பணியாற்றி வந்த யோகேஸ்குமார் மீனா கொடைக்கானல் மாவட்ட வன அலுவலராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் ஒரு மாத காலத்தில் ஆய்வு செய்யப்படும். அங்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு, அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடு பகுதியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும்.
வட்டக்கானல் அருவி
அதேபோல கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு அங்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும். மேலும் மூடப்பட்டுள்ள வட்டக்கானல் அருவி, பியர்சோலா அருவி போன்ற பல்வேறு இடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கூக்கால் அருவிக்கு செல்லும் சாலை குறித்து ஆய்வு நடத்துவதுடன் புதிய சுற்றுலா இடங்களை கண்டறிந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரில் உலா வரும் காட்டு மாடுகளை தடுப்பதற்காக வனத்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதேபோல் பேரீஜம் ஏரி பகுதியிலும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.