டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை; ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.;

Update:2023-09-14 02:55 IST

ஈரோடு, செப்.14-

டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

மகளிர் உரிமைத்தொகை

ஈரோட்டில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் சிலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை, நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க உள்ளதாகவும், அதற்கு பொதுமக்களும், விவசாயிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் அறிந்தோம்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி விட்டு, முடிவு தெரிவிக்கிறோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாநிலம் முழுவதும் 1 கோடி மகளிருக்கு மேல் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. யாரெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எண்ணமாக உள்ளது. கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகளுக்கு தீபாவளி வரை தற்காலிக ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். புதிய வணிக வளாகத்தில் கடைகள் வழங்க அரசு விதிமுறை உள்ளது. அதில், ஏதாவது மாற்றி வியாபாரிகளுக்கு வழங்க முடியுமா? என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றார். அவரது கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மது வாங்குபவர்களுக்கு ரசீது

தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் எந்த பார்களும் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபாட்டில்களால் விவசாயிகளுக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் டெட்ரோ பேக் மூலம் மதுவிற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொழிற்சங்கத்தினருடனும், அதிகாரிகளுடனும் கருத்து கேட்டு வருகிறோம்.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.5, ரூ.10 கூடுதலாக வாங்குவது 99 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது குறுகிய காலத்துக்குள் செய்ய முடியாது. அதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு எந்திரம் வழங்கப்பட்டு, மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்