மேல்விஷாரம் நகராட்சியில் 806 மின்கம்பங்களில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை
மேல்விஷாரம் நகராட்சியில் 806 கம்பங்களில் புதிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு
மேல்விஷாரம் நகராட்சியில் 806 கம்பங்களில் புதிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டம்
மேல்விஷாரம் நகர சபையின் சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குல்சார் அஹமது, ஆணையாளர் ப்ரீத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர் ஜமுனாராணி விஜி பேசுகையில், ''மேல்விஷாரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட கீழ் விஷாரம் குப்பை கிடங்கு அமைந்துள்ள பகுதியில் ஒரு புதிய பம்பு ஹவுஸ் அமைத்து அங்கிருந்து தஞ்சாவூரான் காலனி, சலீம் நகர், மார்க்கபந்து நகர், பிள்ளையார் கோவில் தெரு, புரான்சாமேடு ஆகிய 5 டேங்குகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும்'' என்றார்.
அமீதா பானு பேசுகையில் 18- வது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றார்.
ஜியாவுதீன் அஹமத் பேசுகையில் தெருக்களின் பெயர் மற்றும் அந்த வார்டில் உள்ள நகர மன்ற உறுப்பினரின் பெயரையும் சேர்த்து பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும், ஜபர் அஹமது பேசுகையில் பெரும்பாலான தெருக்களில் உள்ள கம்பங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை என்றும், லட்சுமி சோமசுந்தரம் பேசுகையில் பழுதடைந்த சாலையை சீர் செய்து தர வேண்டும் என்றும் கூறினர்.
நகர்மன்ற தலைவர் தகவல்
கவுன்சிலர் உதயகுமார் பேசுகையில், 7-வது வார்டில் கால்வாய் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும், கோபிநாத் பேசுகையில், மேல்விஷாரத்தில் உள்ள அண்ணா சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறினர்.
நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமதுஅமீன் பதில் அளித்து பேசுகையில், ''நகரில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் சாலைகளை மாற்றி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 806 மின் கம்பங்களில் மின் விளக்குகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகள் மற்றும் ஓட்டல்கள் நடத்தக் கூடாது'' என்றார்.