நீர் வளத்தை மேம்படுத்த நடவடிக்கை
வறண்ட விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வறண்ட விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வறட்சி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் தொடர் வறட்சி காரணமாக கிராம மக்கள் பஞ்சம் பிழைக்க கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை இருந்து வந்தது. மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ள நிலையில் இதில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் கண்மாய்கள் உள்ளன. கடந்த காலங்களில் இந்த கண்மாய்களை மராமத்து செய்ய ஐரோப்பிய யூனியன் நிதி ஒதுக்கீடு செய்தது. ஐரோப்பிய யூனியன் நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட பின்பு கண்மாய்கள் முறையாக மராமத்து செய்யப்படாத நிலை நீடித்தது.
இந்நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடிமராமத்து முறையில் மாவட்டத்தில் 62 கண்மாய்கள் மட்டும் மராமத்து செய்யப்பட்டது. பின்னர் மராமத்து தொடர்ந்து செய்யப்படவில்லை.
ஆக்கிரமிப்பு
இந்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே கடந்த 2018-ல் இம்மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக உருவாக்குவோம் என்று அறிவித்த நிலையில் அதனை தொடர்ந்து மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கென தனி கண்காணிப்பதிகாரி மத்திய அரசின் இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படாத நிலையில் நீர்வளத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது அறிவிப்போடு நின்றுவிட்டது.
மாநில அரசை பொருத்தமட்டில் கண்மாய் மராமத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் கண்மாய் மராமத்து பணிகள் முற்றிலுமாக தடைப்பட்டு விட்டது. இதனால் கண்மாய்களில் கருவேலமர ஆக்கிரமிப்பு, தனிநபர் ஆக்கிரமிப்பு என ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்ட நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீரை தேக்கி வைக்கவும் வழியில்லாமல் போய்விட்டது.
கோரிக்கை
மேலும் வரத்துகால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்களுக்கு நீர்வரத்தும் இல்லாமல் போய்விட்டது. கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெறாத நிலையில் விவசாயமும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே மத்திய, மாநில அரசுகள் மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்த கண்மாய்களை மராமத்து செய்ய உரிய நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது