அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை -அமைச்சர் பேட்டி

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2023-04-27 22:42 GMT

சென்னை,

சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பரந்தாமன் எம்.எல்.ஏ., சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் ரமா சந்திரமோகன், பேராசிரியர் வேல்முருகன், ரோட்டரி சங்க மாவட்ட அதிகாரி நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவச்சேவை

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த ரூ.57.30 கோடி ஒதுக்கி உள்ளோம்.

இப்பணி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் மருத்துவச் சேவையை பெறுவதற்கு தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள்.

மருத்துவ கட்டமைப்பு

எனவே, மருத்துவ கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பட்ஜெட்டில் அறிவித்தபடி சென்னை ராஜீவகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய நரம்பியல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.65 கோடியும், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டவர் பிளாக் கட்டுவதற்கு ரூ.125 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.35 கோடி செலவில் நர்சுகளுக்கான பயிற்சி பள்ளி மற்றும் விடுதி, தீவிர சிகிச்சை பிரிவு கட்டமைப்பை ரூ.112 கோடியில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையின்படி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 100 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கு ரூ.40.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பெரிய ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இதேபோல, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுடனான கூட்டம் நாளை (இன்று) காலை நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, போதை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்